மீண்டும் டைனோசர்கள் அட்டகாசம்: உலகம் முழுக்க ரூ.3,276 கோடி வசூல் - ‘ஜுராசிக் வேர்ல்டு' சாதனை

முதன்முறையாக ‘ஜுராசிக் பார்க்' மூலம் டைனோசர்கள் காட்டப்பட்ட போது எந்த அளவுக்கு வரவேற்பு இருந்ததோ அதே அளவு வரவேற்பை சமீபத்தில் வெளியான 'ஜுராசிக் வேர்ல்டு' திரைப்படமும் தக்க வைத்துக்கொண்டுள்ளது. 1993-ம் ஆண்டு வெளியாகி வசூலில் பெரும் சாதனை படைத்த ‘ஜுராசிக் பார்க்' படத்தின் புதிய பாகம் ‘ஜுராசிக் வேர்ல்டு'. உலகம் முழுக்க கடந்த 12-ம் தேதி வெளியான இப்படம், மூன்றே நாட்களில் 511 மில்லியன் டாலர்களை (சுமார் ரூ.3,276 கோடி) வசூல் செய்துள்ளது. இது ‘ஹாரி பாட்டர் அண்ட் டெத்லி ஹாலோஸ் பாகம் 2' போன்ற படங்கள் செய்த வசூல் சாதனையை விடவும் மிகப் பெரியது என்று கூறப்பட்டுள்ளது. சீனாவில் மட்டும் 100 மில்லியன் டாலர்களை (சுமார் ரூ.600 கோடி) வசூல் செய்துள்ளது. தவிர 66 நாடுகளில் ‘பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்' என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜுராசிக் பார்க் உரிமையாளராக பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் நடித்துள்ளார். இப்படத்தின் வெற்றி குறித்து அவர் கூறும்போது, "இந்தப் புதிய படத்தின் வெற்றி எங்களுக்குக் கிடைத்த ஓர் ஆசிர்வாதமாக உள்ளது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இந்தப் படம் பெற்றிருக்கும் வரவேற்பைப் பார்த்து நாங்கள் நெகிழ்கிறோம். இந்தப் படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். இந்தப் படம் இந்தளவுக்கு வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று அதன் வெளியீட்டுத் தேதி ஆகும். ‘ஜுராசிக் பார்க்' வெளியான அதே நாளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. ‘ஜுராசிக் பார்க்' படத்தின் முதல் இரண்டு பாகங்களை இயக்கிய இயக்குநர் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comment "மீண்டும் டைனோசர்கள் அட்டகாசம்: உலகம் முழுக்க ரூ.3,276 கோடி வசூல் - ‘ஜுராசிக் வேர்ல்டு' சாதனை "

Post a Comment