தனது பாஸ்போர்ட்டை மீட்டுத் தருமாறு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் கடிதம் எழுதியுள்ளார். ஊழல் புகாரில் சிக்கிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு, இங்கிலாந்து அரசு விசா வழங்க உதவியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஒப்புக் கொண்டுள்ளதோடு, "மனிதாபிமான அடிப்படையில் லலித் மோடிக்கு உதவி செய்தேன்" என கூறியிருப்பதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் சுஷ்மா ஸ்வராஜுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "பொய் வழக்குககளை காரணம் காட்டி முடக்கப்பட்டுள்ள எனது பாஸ்போர்ட்டையும் மனிதாபிமான அடிப்படையில் சுஷ்மா ஸ்வராஜ் மீட்டுத் தர வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், சுஷ்மாவுக்கு எழுதிய கடிதத்தின் ஆங்கிலப் பிரதியையும், அதன் தமிழாகத்தையும் உதயகுமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்துள்ளார். அந்தப் பதிவுக்கு அவர் அளித்த முன்னோட்டத்தில், "வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மலைவிழுங்கி மகாதேவன்களான மாபெரும் கிரிமினல் குற்றவாளிகளுக்கே மனிதாபிமான அடிப்படையில் பாஸ்போர்ட், விசா பெற உதவுவதால், மக்கள் போராட்ட வழக்குகளால் பாஸ்போர்ட், வேலை, வருமானம் இன்றி தவிக்கும் எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் மனிதாபிமான அடிப்படையில் உதவிட வேண்டி நான் எழுதியிருக்கும் கடிதம்" எனக் குறிப்பிட்டுள்ளார். கடிதத்தின் முழு விபரம்: வணக்கம். எனது பெயர் சுப.உதயகுமார். தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அமைதியான முறையில் நான் போராட்டத்தை நடத்தி வருகிறேன். இந்த அறப்போரில் எனது பங்களிப்புக்காக, மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, பொய் வழக்குகளை போட்டு எனது பாஸ்போர்ட்டை முடக்கியுள்ளது. நான் இடிந்தகரை போராட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்னதாக வெளிநாடுகளில் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்குச் சென்று கல்வி பயிற்றுவித்து வந்தேன். என் குடும்பத்தை நடத்துவதற்கு அது மட்டுமே ஒரே வாழ்வாதாரமாக இருந்தது. நான், எனது மனைவி, இரண்டு குழந்தைகள், எனது பெற்றோர் என அனைவருக்கும் என் சம்பாத்தியம் மட்டுமே வாழ்வாதாரம். இந்நிலையில் எனது பாஸ்போர்ட் அரசால் பறிமுதல் செய்யப்பட்டதால் என்னால் வெளிநாடுகளுக்குச் சென்று எனது ஆசிரியர் பணியை தொடர முடியவில்லை. குடும்பத்துக்கு வருமானம் ஈட்ட முடியாத சூழலில் இருக்கிறேன். இத்தகைய சூழலில்தான், நீங்கள் மனிதநேய அடிப்படையில் பாஸ்போர்ட், விசா பெறுவதற்கு உதவி வருவது எனக்குத் தெரிய வந்தது. எனவே உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். அதே மனிதாபிமான அடிப்படையில் முடக்கப்பட்ட எனது பாஸ்போர்டையும் (பாஸ்போர்ட் எண்:J3347811 ) மீட்டுத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். காலத்தினால் ஆன அந்த உதவியை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன். எனது வாழ்த்துகளை உங்களுக்கு உரித்தாக்குகிறேன். அதேபோல், கூடங்குளம் அணுஉலைக்கு எதிரானப் போராட்டத்தின்போது எங்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளின் அடிப்படையில், எங்கள் ஊர்களிலுள்ள பலருடைய கடவுச்சீட்டுக்கள் (Passports) முடக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து வந்து இறங்கியதும் பலருடைய கடவுச்சீட்டுக்கள் விமான நிலையத்திலேயே பிடுங்கப்பட்டிருக்கின்றன. புதிதாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பலரிடம் அவர்கள் மீது வழக்குகள் இருப்பதாகக்கூறி காவல்துறையினர் தடையில்லாச் சான்றிதழ் வழங்க மறுக்கின்றனர். மேற்கண்ட நடவடிக்கைகளின் காரணமாக, பலர் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை இழந்து வருகின்றனர். பல குடும்பங்கள் போதிய வருமானம் இன்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, ஒருசில அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் வேறு வழிகளில் கடவுச்சீட்டுப் பெற்றுத் தருவதற்கு கணிசமான பணத்தையும் மக்களிடமிருந்து கறந்து வருகின்றனர். எங்கள் வளங்களையும், வாழ்வுரிமைகளையும், வருங்காலத் தலைமுறைகளையும் காப்பதற்காக அமைதியான முறையில், அறவழியில் போராடிய எங்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, பொய் வழக்குகளை போட்டு, மத்திய, மாநில அரசுகள் எங்களை இப்படிக் கொடுமைப்படுத்துகின்றன. எங்கள் மீது போடப்பட்ட 213 பொய் வழக்குகளை திரும்பப் பெற்றிருக்கிற தமிழக அரசு, எஞ்சியுள்ள பொய் வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும், எங்கள் மக்களுக்கு தங்குதடையின்றி கடவுச்சீட்டுக் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தங்கள் உண்மையுள்ள சுப.உதயகுமார்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "உதயகுமாருக்கு 'மனிதநேய' உதவி செய்வாரா சுஷ்மா?"
Post a Comment