முதல் அமெரிக்க அதிபராக சிறைக்கு சென்ற பராக் ஒபாமா

அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக அதிபர் ஒபாமா இன்று சிறை சென்றார்.

உலக சிறை கைதிகளில் நான்கில் ஒரு பகுதியினர் அமெரிக்காவில் உள்ள சிறைகளுக்குள் அடைபட்டிருக்கும் நிலையில் சிறை கைதிகளின் அடிப்படை வசதி உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து, சீர்திருத்தம் செய்யும் நோக்கில் இங்குள்ள ஓக்லாஹாமா சிறைச்சாலைக்கு அதிபர் ஒபாமா இன்று திடீர் விஜயம் செய்தார்.

எல் ரெனோ சிறைக்கு அதிகாரிகள் புடைசூழ வந்த ஒபாமா, ‘பி’ பிரிவு கட்டிடங்களை சுற்றிப் பார்த்தார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி அங்கு அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை அவர் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குற்றங்களை கட்டுப்படுத்தவும், குற்றம் செய்பவர்களை சீர்திருத்தவும் சிறைச்சாலைகள் தான் சிறந்த தீர்வா? என்பதைப் பற்றி நாம் யோசிக்க வேண்டியுள்ளது. 

வன்முறையற்ற சாதாரண குற்றங்களுக்கும் 20 ஆண்டு, 30 ஆண்டு மற்றும் ஆயுள் சிறை தண்டனை அளிப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுவிட இயலுமா? என்பது தொடர்பாகவும் நாம் சீராய்வு செய்ய வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.

கைதிகளுடன் பேசிய அனுபவம் தொடர்பாக குறிப்பிட்ட ஒபாமா, இவர்களில் நிறைய பேர் இளைஞர்களாக உள்ளனர். மற்ற நாடுகளில் இவ்வளவு இளம் குற்றவாளிகள் கைதிகளாக இல்லை. முட்டாள்தனமான காரியங்களை செய்துவிட்டு, இங்கு குற்றவாளிகளாக இவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இவர்கள் செய்த சில முட்டாள்தனங்களை நானும், நீங்களும் (பத்திரிகையாளர்கள்) செய்ததுண்டு.

இந்த ஆண்டுக்குள் அர்த்தமுள்ள சிறை சீர்திருத்த சட்டத்தை கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

அமெரிக்க அதிபராக தனது பதவி காலத்தில் முதன்முறையாக சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டவர் ஒபாமா தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்காவில் சிறைகளின் நிர்வாகத்துக்கென ஆண்டுதோறும் சுமார் 8 ஆயிரம் கோடி டாலர்கள் நிதியாக ஒதுக்கப்படுகின்றது. இருப்பினும், லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட பின்னர் வாகனம் ஓட்டியது போன்ற சில்லரை குற்றங்களுக்கு எல்லாம் போலீசார் நாள்தோறும் பலரை கைது செய்து சிறைக்கு அனுப்பிக் கொண்டே இருப்பதால் சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகின்றது.

இதன் விளைவாக, இடப் பற்றாக்குறை, சுகாதாரமற்ற சுற்றுச்சூழல் என அமெரிக்க சிறைகளில் ஏகப்பட்ட நெருக்கடிகள் உள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றன. இதையடுத்து, புதிய சிறை சீர்திருத்த சட்ட திருத்த மசோதாவை அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பராக் ஒபாமா, இன்று ஓக்லஹோமாவில் உள்ள எல் ரெனோ சிறைக்கு விஜயம் செய்தார், என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comment "முதல் அமெரிக்க அதிபராக சிறைக்கு சென்ற பராக் ஒபாமா"

Post a Comment