கர்நாடக அரசின் திருத்தப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்


சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறை யீட்டு மனுவில் 10 குறைபாடுகள் இருப்பதாக உச்ச நீதிமன்றம் அண்மையில் சுட்டிக் காட்டியது.
அந்த குறைபாடுகளை நீக்கிய கர்நாடக அரசு, திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சகிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ல் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.
இதை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி சி.ஆர். குமாரசாமி கடந்த மே 11-ம் தேதி ஜெயலலிதா உட்பட 4 பேரையும் விடுதலை செய்தார்.
இந்தத் தீர்ப்பில் பல அடிப்படை தவறுகளும் கணித பிழைகளும் இருப்பதாக பல்வேறு தரப்பினர் சுட்டிக் காட்டினர்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் கடந்த ஜூன் 23-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை ஆராய்வதற்காக 6 பேர் குழுவை உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் நியமித்தது. அந்த குழு நடத்திய ஆய்வில், கர்நாடக அரசின் மனுவில் 10 முக்கிய குறைபாடுகள் இருப்பது சுட்டிக் காட்டப்பட்டது.
இதையடுத்து கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தலைமையிலான குழுவினர் கடந்த சில நாட்களாக மேல்முறையீட்டு மனுவை திருத்தும் பணியை மேற்கொண்டனர்.
அந்தப் பணிகள் நிறைவடைந்து கர்நாடக அரசின் டெல்லி வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் மீண்டும் சரிபார்த்த பிறகு வழக்கு எண் ஒதுக்கப்பட்டு, வழக்கை விசாரிக்கப் போகும் அமர்வுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து திமுக தாக்கல் செய்த மனுவில் ஒன்பது குறைபாடுகள் இருப்பதாக உச்ச நீதிமன்றம் அண்மையில் சுட்டிக் காட்டியது நினைவுகூரத்தக்கது.

0 Comment " கர்நாடக அரசின் திருத்தப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்"

Post a Comment