யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்

மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி யாகூப் மேமன் வியாழக்கிழமை அதிகாலை 6.51 மணிக்கு நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். யாகூப் மேமன் தரப்பில் கடைசி வரை முயற்சிக்கப்பட்ட சட்டப் போராட்டங்கள் பலன் தரவில்லை. மும்பையில் உள்ள யாகூப் மேமன் வீட்டுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்ததை அடுத்து, யாகூப் மேமன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கடைசி மனுவும் அதிகாலை 5 மணியளவில் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. யாகூப் மேமனுக்கு வயது 54. தனது பிறந்த நாளில் (ஜூலை 30) யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டது கவனிக்கத்தக்கது. யாகூப் மேமன் அதிகாலை 6.35 மணிக்கு தூக்கிலிடப்பட்டார் என்று நாக்பூர் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பிரதேசப் பரிசோதனைக்காக அவரது உடல் நாக்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பரபரப்பான புதன்கிழமை... கடந்த 1993-ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய யாகூப் மேமனுக்கு தடா நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, நாக்பூர் மத்திய சிறையில் ஜூலை 30-ம் தேதி (இன்று) தூக்கு தண்டனையை நிறைவேற்றவிருந்த நிலையில், இதற்கு தடை கோரி, யாகூப் மேமன் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனில் தவே, குரியன் ஜோசப் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் இரண்டு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியதால் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இம்மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி பந்த், அமிதவ ராய் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜரானார். அவர், 'யாகூப் மேமனின் மறுசீராய்வு மனு மீதான விசாரணையில் நடைமுறை மீறப்பட்டுள்ளதாக நீதிபதி குரியன் ஜோசப் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த அமர்வு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் மூன்று பேர் அடங்கிய அமர்வு, யாகூப் மேமனின் மறுசீராய்வு மனுவை விசாரித்து தள்ளுபடி செய்துள்ளது. இதை செல்லாது என்று அறிவிக்க எந்த முகாந்திரமும் இல்லை. இந்த வாதத்தை ஏற்க முடியாது' என்று வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மறுசீராய்வு மனு மீது உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை என்று தீர்ப்பளித்தனர். மேலும், மேமன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்.துளசி, 'யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, குடியரசுத் தலைவரிடமும், மகாராஷ்டிர ஆளுநரிடமும் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வரும் வரை தூக்கு தண்டனையை அமல்படுத்த முடியாது' என்று வாதிட்டார். அதற்கு நீதிபதிகள், 'கருணை மனுக்கள் நிர்வாக அதிகாரத்தின் கீழ் வருபவை. அதற்கும் வழக்குக்கும் தொடர்பில்லை' என்று கூறி அவரது வாதத்தை நிராகரித்தனர். தூக்கு தண்டனை குறித்த உத்தரவு கடந்த 13-ம் தேதி தான் யாகூப் மேமனிடம் வழங்கப்பட்டது. போதிய கால அவகாசம் தரப்படவில்லை என்ற வாதத்தையும் நீதிபதிகள் நிராகரித்தனர். யாகூப் மேமன் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அனைத்து பரிகாரங்களையும் முழுமையாக பயன்படுத்திவிட்டார். மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு, தூக்கு தண்டனையை நிறைவேற்றும் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தனர். கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்.... இந்த தீர்ப்பு வெளிவந்த சிறிதுநேரத்தில், மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், கருணை மனுவை நிராகரித்து உத்தரவு பிறப்பித்தார். குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட இரண்டாவது கருணை மனு மீது நேற்றிரவு வரை எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இறுதியில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைத்ததும், யாகூப் மேமன் கருணை மனுவை நிராகரிக்க மத்திய அரசு பரிந்துரை அளித்தது. யாகூப் அனுப்பிய கருணை மனுவை மத்திய அரசு நிராகரித்த முடிவை குடியரசுத் தலைவர் பிரணாபை நேரில் சந்தித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்ததார். இதன் தொடர்ச்சியாக, யாகூப் மேமனின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். கடைசி முயற்சியும் தோல்வி... கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்த நிலையில், மேலும் ஒரு கடைசி முயற்சியாக, மேமனின் வழக்கறிஞர்கள் புதன்கிழமை பின்னிரவில் உச்ச நீதிமன்றத்தை நாடினர். யாகூப் மேமனுக்கு கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற, உச்ச நீதிமன்ற நெறிமுறைகளின்படி, அவருக்கு 14 நாட்களாவது அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் உத்தரவு பிறப்பித்தது. நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அதே 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, யாகூப் மேமனின் கடைசி மனுவையும் தள்ளுபடி செய்தனர். ஒரு தூக்கு தண்டனை கைதியின் முதலாவது கருணை மனு நிராகரிக்கப்படும்போதுதான் இந்தக் கோரிக்கை பொருந்தும் என்று அடிப்படையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, மேமனின் கடைசி முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது. மும்பை குண்டுவெடிப்பு வழக்கு... 1993 மார்ச் 12-ம் தேதி பிற்பகலில் மும்பை நகரில் 13 இடங்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 257 பேர் பலியாயினர். 700 பேர் காயம் அடைந்தனர். தொடர் குண்டுவெடிப்பில் தலைமறைவாக உள்ள டைகர் மேமனின் தம்பி யாகூப். 2007 ஆண்டு ஜூலை 27-ம் தேதி தடா நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்தது. இந்த குண்டுவெடிப்பு சதியில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு யாகூப் நிதி உதவி செய்தார் என விசாரணை நீதிமன்றம் தெரிவித்தது. நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். யாகூப்பின் பெற்றோர், அவரது 3 சகோதரர்கள், உறவுக்கார பெண் ஆகியோர் இந்த வழக்கில் விசாரணையை எதிர்கொண்டனர். இதில் யாகூபின் மனைவி, தாயார், சகோதரர் விடுவிக்கப்பட்டனர். பிற சகோதரர்களான எசா, யூசுப், உறவுக்கார பெண் ரூபினா ஆகியோர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டனர். தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஏ.சனாப், 2015 ஏப்ரல் 29-ம் தேதி யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

0 Comment "யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார் "

Post a Comment