மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி தீவிர போராட்டம்: சென்னையில் 36 இடங்களில் ஆர்ப்பாட்டம்.

மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி தீவிர போராட்டம்: சென்னையில் 36 இடங்களில் ஆர்ப்பாட்டம்; 1,254 பேர் கைது - கட்சியினர், பெண்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் களத்தில் இறங்கினர்


மதுவிலக்கு கோரி நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தையொட்டி சென்னை மாநகரில் 36 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்களில் 1,254 பேர் கைது செய்யப்பட்டனர். மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
முழு மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி தமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு மதிமுக, இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை அழைப்பு விடுத்திருந்தன. தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
முழு அடைப்பை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களை ஆகஸ்ட் 3-ம் தேதி இரவே காவல்துறையினர் கைது செய்தனர்.
ரயில், பஸ் நிலையங்கள், பஸ் பணிமனைகள், கல்லூரிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்புக்காக காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
அரசு பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கின. பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட்டன. சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் முழு அடைப்பில் பங்கேற்றன. அதனால் 10 சதவீத ஆட்டோக்கள் இயங்கவில்லை.
பாதுகாப்புடன் மதுக் கடைகள்
முழு அடைப்பை முன்னிட்டு சென்னை மாநகரில் உள்ள டாஸ்மாக் கடைகள் காவல்துறையினர் பாதுகாப்புடன் இயங்கின. வழக்கத்தை விட விற்பனை சற்று குறைந்தாலும் ஏராளமானவர்கள் மது வகைகளை வாங்கிச் சென்றதை பல இடங்களில் காண முடிந்தது.
முழு அடைப்புக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் ஆதரவு தெரிவித்திருந்தார்.
80 சதவீத கடைகள் திறப்பு
ஆனாலும் மாநகர் முழுவதும் 80 சதவீத கடைகள் திறந்திருந்தன. பிற்பகல் 2 மணிக்குப் பிறகு கடைகள், வணிக நிறுவனங்கள் முழுமையாக இயங்கின. ஆனாலும் புறநகர் ரயில்கள், பஸ்கள், வணிக வளாகங்கள், சாலைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது.
36 இடங்களில்..
முழு அடைப்பை முன்னிட்டு சென்னை மாநகரில் 36 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன், இரா.முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் 150 பேர் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீஸார் அவர்களை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நளினி, மக்கள் உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் சிம்ராஜ் மில்டன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் 150 பேர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் மது பாட்டில்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தால் பிராட்வே பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடல் அறக்கட்டளை சார்பில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 100 பெண்கள் பங்கேற்றனர். மது பாட்டில்களை வாங்கி தாங்கள் அணிந்திருந்த தாலியில் மாட்டி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
பாரத் இந்து முன்னணி சார்பில் சென்னை ஓட்டேரி அருகே மூக்குபொடி பஸ் நிலையம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெற்றது.
நந்தனம் சிக்னல் அருகே உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (லெனினிஸ்ட்) கட்சியினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திரண்ட 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென பொதுமக்கள் டாஸ்மாக் கடை மீது கல் வீசி தாக்கத் தொடங்கினர். இதில் காவலர் ஒருவர் காயமடைந்தார்.
கந்தன்சாவடி எம்ஜிஆர் சாலையில் பெருங்குடி வட்டார கூட்டமைப்பு, மதிமுக, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளை சேர்ந்த 50 பேர் மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்தினர்.
ராஜீவ்காந்தி சாலை மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோழிங்கநல்லூரில் உள்ள முகமது சதக் கல்லூரியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதுவிலக்கு கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் வேல்முருகன் தலைமையில் மது பாட்டில்களை மாலையாக அணிந்து போராட்டம் நடத்தினர்.
மதுவிலக்கை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றாலும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். சென்னை மாநகரில் 36 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 100 பெண்கள் உள்பட 1,254 பேர் கைது செய்யப்பட்டு சமூக நலக்கூடங்கள், திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மற்றவர்கள் அனைவரும் மாலை யில் விடுதலை செய்யப்பட்டனர் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். போராட்டங்கள் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 Comment "மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி தீவிர போராட்டம்: சென்னையில் 36 இடங்களில் ஆர்ப்பாட்டம்."

Post a Comment