மகனை முதுகில் தூக்கி கொஞ்சியது குற்றமா? அமெரிக்காவில் இந்திய குடும்பம் படும் கஷ்டத்தை பாருங்க

உப்பு மூட்டை விளையாட்டு விளையாடும்போது மகன் முதுகில் இருந்து விழுந்து காலை உடைத்துக் கொண்டதற்காக தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் ஒரேகன் மாகாணம், பிவர்டன் நகரில் இந்தியாவை சேர்ந்த ஒரு தம்பதி வசித்து வருகிறது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கணவர் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் முக்கிய பணியிலுள்ளார். கடந்த பிப்ரவரி 6ம் தேதி, தனது மூன்றவை வயது மகனை முதுகில் தூக்கி உப்பு மூட்டை விளையாட்டு காண்பிக்க தந்தை முயன்றுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக மகன் கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. ரன்டல் சிறார் மருத்துவமனைக்கு குழந்தையை அதன் தாய் தூக்கி சென்று காண்பித்துள்ளார். அப்போது டாக்டர் கேட்ட கேள்விக்கு, மகனை அவனது தந்தை கீழே போட்டிருக்கலாம் என்று ஒரு வார்த்தையை கூறிவிட்டார். அவ்வளவுதான், ஆஸ்பத்திரியில் பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்த சமூக சேவை அமைப்பினர் அந்த பெண்ணிடம் ஏதேதோ ஆவணங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர். அவசரத்தில் அப்பெண்ணும் கையெழுத்து போட்டுள்ளார். ஆனால் பிறகுதான் தெரிந்துள்ளது, சிறுவனை கீழே தள்ளிய தந்தையை வீட்டுக்குள்ளே அனுமதிக்க கூடாது என்பதற்கான உத்தரவுதான் அந்த ஆவணங்களில் எழுதப்பட்டிருந்தது என்பது. இதன்பிறகு கணவர், தனது கூட வேலை பார்ப்போர் வீடுகளிலும், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்த நிலையில், சமூக சேவை அமைப்பினர் அடிக்கடி இந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து கவுன்சலிங் கொடுத்துள்ளனர். உன் கணவர் ரொம்ப கோபக்காரரோ.. கோபத்தில் சுவற்றில் தலையை முட்டிக்கொள்வாரோ.. என்றெல்லாம் கேட்டுள்ளனர். அந்த பெண்ணோ, தனது கணவர் அப்படிப்பட்டவர் இல்லை என்று திரும்ப திரும்ப சொல்லியும் சேவை அமைப்பு விடுவதாக இல்லை. இரு குழந்தைகளையும் தனியாக கவனிப்பது கஷ்டம் என்று தாய் புலம்பிய பிறகு கணவர் சில நாட்களுக்கு மட்டும் வீட்டுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, அவருக்கும், தாய்க்கும் சேர்த்து குடும்பத்தை எப்படி நடத்துவது, கோபத்தை எப்படி குறைப்பது என்றெல்லாம் கவுன்சலிங் கொடுத்துள்ளனர் அந்த சேவை அமைப்பினர். பாடாய் படுத்தியபிறகு ஒருவழியாக ஜூன் மாத கடைசியில், தந்தை மீதான வழக்கை வாபஸ் பெறலாம் என்று சேவை அமைப்பு சிபாரிசு செய்துள்ளது. ஆனால் ஜூலை மாதம் 22ம் தேதி, இவ்வழக்கு, சிறார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, குழந்தையின் தாய், மனதளவில் சோர்ந்துள்ளார். எனவே, சிறுவனை அவனது தந்தை தள்ளிவிட்டிருக்கும் வாய்ப்பை அந்த பெண் மறுத்து சொல்வதை ஏற்க முடியாது என்று கூறி, தந்தை குற்றவாளிதான் என்று உத்தரவிட்டார். மறுநாளே, தந்தை கைது செய்யப்பட்டார். 1000 டாலர் செலுத்தி ஜாமீனில் அவர் வெளியே வெளியே வந்துள்ளார். இருப்பினும், அவரை வீட்டுக்குள் அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவருகிறது. இதனால் மீண்டும் இரு குழந்தைகளை கவனிக்க அந்த தாய் சிரமப்படுகிறார். கொல்கத்தாவிலுள்ள தனது தாயை உதவிக்கு அழைப்பதற்காக, விசா வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்திய வளர்ப்பு முறைக்கும், அமெரிக்காவின் குழந்தை வளர்ப்பு முறைக்கும் உள்ள மாபெரும் வித்தியாசத்தை இந்த சம்பவம் படம் போட்டு காட்டியுள்ளது.

0 Comment "மகனை முதுகில் தூக்கி கொஞ்சியது குற்றமா? அமெரிக்காவில் இந்திய குடும்பம் படும் கஷ்டத்தை பாருங்க"

Post a Comment