கன்னியாகுமரி தொடங்கி நீரோடி வரை கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்கள் 64. இந்த 64 கிராமங்களில் ஒன்றில் கூட மதுக்கடையோ, அல்லது வேறு எந்த விதமான போதை மருந்து கடைகளோ கிடையாது. சுத்தமாக கிடையாது. குடிக்கிறவர்கள் வெளியூர்களில் சென்று குடித்து விட்டு வரலாம். இது பஞ்சாயத்தார் முடிவு. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து ஊருக்குள் யாரும் மது விற்பனை செய்து பார்த்ததில்லை.
குடி மீனவ கிராமங்களில் மிகப்பெரிய பிரச்சனையாக அல்ல, ஒரு பிரச்சனையாக இருந்த காலங்கள் உண்டு. 90 -களுக்குப் பிறகு ஏற்பட்ட தலைமுறை மாற்றங்களால் அதில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது. உள்ளூர் மீன் பிடித் தொழிலே அருகி வரும் நிலையில் மது அருந்தும் அளவும், அதன் பண்பும் வேறு வடிவங்களை எடுத்திருக்கிறது எனலாம்.
சரி 64 கிராமங்களிலும் மதுக்கடைகள் இல்லை. பள்ளிக்கூடங்கள் இருக்கிறதா? ஆமாம் 64 கிராமங்களிலும் ஒரு கிராமம் கூட விடாமல் எல்லா கிராமங்களிலும் மேல் நிலைப்பள்ளிகள் வரை உள்ளன. இந்த 64 பள்ளிகளில் ஒரு அரசுப் பள்ளிக் கூட கிடையாது என்பது உங்களுக்கு ஆச்சரியமான தகவலாக இருக்கும். அரசால் முழுமையாக புறக்கணிக்கப்பட்ட பகுதி என்றால் அது குமரி மாவட்ட கடலோரங்கள்தான். ஆனால் தங்களின் சொந்த உழைப்பில் முன்னேறிய சமூகமும் அதுதான். அனைத்து பள்ளிகளும் கத்தோலிக்க மிஷனரிகளும், உள்ளூர் நிர்வாகமும் இணைந்து நடத்தும் பள்ளிக் கூடங்கள்.
இது எப்படி சாத்தியமானது என்பது மிக நீண்ட கட்டுரை ஆகும் என்பதால் முடித்துக் கொள்கிறேன். மாலை ஏழு மணி ஆனால் கிராமம் அமைதியாகி விடுகிறது . யாரும் கால்பந்து விளையாடுவதில்லை, எல்லோரும் மிடில் கிளாஸ் மன நிலைக்கு சென்று விட்டார்கள் ’மாப்ள ’என்கிறான் இன்னும் கிராமத்தில் வாழும் என் பால்ய ஸ்நேகிதன்.
0 Comment "மதுக்கடை இல்லா குமரி மீனவ கிரமங்கள் !!"
Post a Comment