சசிபெருமாள் மனைவி, மகளிடம் தேமுதிக சார்பில் ரு.1 லட்சத்துக்கான காசோலையை விஜயகாந்த் வழங்கினார்.
‘சசிபெருமாளின் குடும்பத்துக்கு இன்னொரு மகனாக நான் இருப்பேன்’ என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார். சசிபெருமாள் குடும்பத்தினருக்கு ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி அவர் ஆறுதல் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த் தாண்டம் அருகே மதுக்கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார். அவரது குடும்பத் தினருக்கு ஆறுதல் கூற சேலம் மாவட்டம், இளம்பிள்ளை இடங் காணசாலைக்கு நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வந்தார்.
இளம்பிள்ளை பேருந்து நிலையத்தில் இருந்து திறந்த வாகனத்தில் தனது மனைவி பிரேமலதாவுடன் நின்றபடி, சசிபெருமாள் வீடு வரை மவுன ஊர்வலமாக வந்தார். இதில், சுதீஷ், எம்.எல்.ஏ.க்கள் மோகன்ராஜ், பார்த்திபன் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேமுதிகவினர் பங்கேற்றனர்.
பின்னர், சசிபெருமாளின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரது மனைவி மகிழம் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை மகிழத்திடம் வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: காந்தியவாதி சசிபெருமாள் நல்லதொரு தியாகி. சிறு வயது முதல் பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தக்கோரி அவர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளார். சசிபெருமாளின் மரணம் மர்மமாக உள்ளது. இதை கண்டறிந்து அரசு நீதியை நிலைநாட்ட வேண்டும்.
தனது 14 வயதில் இருந்தே மதுவிலக்கு கோரி போராட்டங்களை நடத்தி வந்த சசிபெருமாள், யாருக்கும் பயப்படவேண்டியதில்லை. அவர் செல்போன் கோபுரத்தில் இருந்த போது கழுத்தில் கயிறு இறுக்கியதாக கூறுகின்றனர். அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழையல்ல. சசிபெருமாளின் குடும்பத்துக்கு இன்னொரு மகனாக நான் இருப்பேன். அவரது கோரிக்கையான பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
0 Comment "சசிபெருமாளின் குடும்பத்துக்கு இன்னொரு மகனாக நான் இருப்பேன்:விஜயகாந்த்"
Post a Comment