உலக மசாலா: தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்!

பிரேசிலைச் சேர்ந்தவர் ரிகார்டோ அஸிவேடோ. தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிளைக் கண்டுபிடித்திருக்கிறார். டி பவர் ஹெச்2ஓ (T Power H2O) என்று அழைக்கப்படும் இந்த மோட்டார் சைக்கிளில் 1 லிட்டர் தண்ணீரை ஊற்றி சுமார் 500 கி.மீ. தூரம் பயணம் செய்திருக்கிறார். சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்பது மிக முக்கியமானது. கார்களில் பயன்படுத்தப்படும் பேட்டரியை மோட்டார் சைக்கிளில் பொருத்தியிருக்கிறார்.
பேட்டரியில் இருந்து கிடைக்கும் மின்சாரம், தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளில் இருந்து ஹைட்ரஜனைத் தனியாகப் பிரித்து விடுகிறது. நீரிலிருந்து கிடைக்கும் ஹைட்ரஜன் எரிசக்தியாக மாறுகிறது. இதனால் மோட்டார் இயங்குகிறது. அஸிவேடோவின் மோட்டார் சைக்கிளை ஓர் உதாரணமாகவே எடுத்துக்கொள்ள முடியும். இன்று இருக்கும் நிலையில் அதிக அளவில் இதுபோன்ற மோட்டார் சைக்கிள்களை உருவாக்க இயலாது. இன்னும் பல பரிசோதனைகளும் முன்னேற்றங்களும் இந்த மோட்டார் சைக்கிளுக்குத் தேவைப்படுகின்றன.
இன்னொரு ராமர் பிள்ளை!
ஃப்ளோரிடாவில் மெர்சிடிஸ் கார் ஒன்று காணாமல் போய்விட்டதாக, காவல் துறைக்குப் புகார் வந்தது. தொலைந்து போன காரைத் தேடும் பணியில் இருந்தபோது, மெர்சிடிஸ் சிக்கியது. காரை ஓட்டி வந்த 20 வயது இளைஞர் கென்ஸோ ரோபர்ட்ஸிடம் இருந்த பையைப் பரிசோதித்தபோது, அவர் பொய்யான பெயரில் அடையாள அட்டை, போலி உரிமம் வைத்திருந்தது தெரிந்தது. அவரை அழைத்துச் சென்று, காவலர்களின் வாகனத்தில் அமர வைத்துவிட்டனர்.
உடனே ரோபர்ட்ஸ், தன்னுடைய கைரேகைகளை அழிக்கும் முயற்சியில் இறங்கி னார். பற்களால் உள்ளங்கை ரேகைகளைக் கடித்து, கடித்து துப்பினார். ஒருபக்கம் கடித்ததால் ஏற்பட்ட வலி, இன்னொரு பக்கம் மாட்டிக்கொள்வோம் என்ற பதற்றம். ரோபர்ட்ஸ் செய்த அத்தனைக் காரியங்களும் வண்டியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகிவிட்டது. ரோபர்ட்ஸ் இத்தனைக் கஷ்டப்பட்டும் கைரேகை பரிசோதனை காட்டிக் கொடுத்துவிட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அடப்பாவி…
பிரிட்டனில் வசிக்கும் 101 வயது ஹில்டா ஜாக்சன் பீரங்கி வாகனத்தை ஓட்டியதன் மூலம் தன் கனவை நிறைவேற்றிக்கொண்டார். ஹில்டாவின் 101வது பிறந்தநாள் அன்று அவருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. காக்பிட்டில் அமர்ந்து சில மீட்டர்கள் தூரம் வாகனத்தை ஓட்டிச் சென்றார். தன் வாழ்நாளில் மிகச் சிறந்த தருணமாக ஹில்டா இதைக் கூறியிருக்கிறார். ஹில்டாவின் 72 வயது மகள். 1950களில் 5 மாதங்கள் கார் மூலமே ஐரோப்பாவைச் சுற்றி வந்தவர் ஹில்டா. அவருக்கு வாகனங்கள் ஓட்டுவதில் இன்றுவரை ஆர்வம் குறையவில்லை.

0 Comment "உலக மசாலா: தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்!"

Post a Comment