இந்திய குடியுரிமை உறுதியானதால் வங்கதேச எல்லையில் நேற்று தேசிய கொடியுடன் கொண்டாட்டத்துக்கு தயாரான முதியவர்கள், சிறார்கள். படம்: சஞ்சய் கோஷ்
இந்தியா வங்கதேசம் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க நில எல்லை ஒப்பந்தம் நேற்று அமலுக்கு வந்தது.
இதன்படி 7,110 ஏக்கரை உள்ளடக்கிய 51 நிலத்திட்டுகளை இந்தியாவிடம் அளித்து விட்டு, 17,160 ஏக்கரை உள்ளடக்கிய 111 நிலத்திட்டுகளை வங்கதேசம் பெற்றுக் கொண்டது. இதன் மூலம் இருநாடுகளுக்கிடையே சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒப்பந்தம் இப்போது நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய எல்லைப் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வந்துள்ளது.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு பாகிஸ்தானாக இருந்து புதிய நாடாக உருவானது வங்கதேசம். அப்போது இந்தியா வங்கதேசம் இடையிலான நில எல்லை, சர்ச்சைக்கிடமான வகையில் பிரிக்கப்பட்டது. இந்திய நிலப் பகுதிக்குள் வங்கதேசத்துக்கு சொந்தமான நிலத் திட்டுகளும், வங்கதேசத்துக்குள் இந்தியாவுக்கு சொந்தமான நிலத்திட்டுகளும் சிக்கின. இதனால், பரஸ்பரம் இரு நாடுகளுமே எந்த வகையிலும் முழுமையாக நிர்வகிக்க முடியாத பல பகுதிகள் உருவாகின. இது தொடர்பாக நில எல்லை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டாலும் பல்வேறு தடங்கல்களால் அது கடந்த 40 ஆண்டுகளாக நடைமுறைக்கு வரவில்லை.
இதனால் இங்கு வசித்து வந்த மக்கள் எந்த ஒரு நாட்டின் சட்டப்படியான உரிமைகளையும் பெற முடியாமலும், எந்த நாட்டாலும் சொந்த மக்களாகப் பார்க்கப்படாமலும் தனித்து விடப்பட்டார்கள். இந்நிலையில் இப்போது தங்களுக்கு நிரந்தரமாக ஒரு நாட்டில் குடியுரிமை கிடைத்துள்ளதால் அப்பகுதி மக்கள் நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. இரு நாட்டு அதிகாரிகளும் தங்கள் பகுதிக்குள் தங்கள் நாட்டு தேசிய கொடியை ஏற்றினர்.
முன்னதாக கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் வங்கதேசம் வந்த பிரதமர் மோடி நில எல்லை தொடர் பாக வங்கேதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பேசினார். இதை யடுத்து இரு நாடுகள் இடையே நில எல்லை பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் அப்போது உடனிருந்தார்.
இந்நிலையில் நேற்று அந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. அதன்படி வங்கதேச நிலப் பகுதிக் குள் சிக்கிவிட்ட 37,000 இந்தியர்கள் இந்திய நில எல்லைக்குள் சென்றனர். ஒட்டுமொத்தமாக சுமார் 60 ஆயிரம் பேருக்கு தேசிய அடையாளம் கிடைத்துள்ளது. சம்பந்தப்பட்ட மக்கள் அவர்கள் விருப்பப்படும் நாட்டுடன் செல்லலாம் என்பதும் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த நில எல்லை பகிர்வு ஒப்பந்தத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு ரூ.3,048 கோடி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய நிலப்பகுதிகள் அசாம், மேற்கு வங்கம், திரிபுரா, மேகாலயா மாநில எல்லைகளுக்குள் சேர்க்கப் பட்டுள்ளன.
0 Comment "இந்தியா - வங்கதேசம் இடையே நில எல்லை ஒப்பந்தம் அமல்: இந்திய குடியுரிமை உறுதியானதால் மக்கள் கொண்டாட்டம"
Post a Comment