சிறுவன் பாஸ்போர்ட்டை தவற விட்டதால் சென்னை திரும்பிய விமானம்

சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா செல்லும் விமானம் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானம் புறப்பட்டு 20 நிமிடம் பறந்த பிறகு, அந்த விமானத்தில் இருந்த 15 வயது சிறுவன் தனது பாஸ்போர்ட்டை காணவில்லை என்றும், அதை சென்னையில்தான் அதிகாரிகள் ஆய்வு செய்த இடத்தில் தவற விட்டு விட்டதாகவும் விமானிக்கு தகவல் தெரிவித்தார்.பாஸ்போர்ட் இல்லா விட்டால் தொடர்ந்து பயணம் செய்ய முடியாது. எனவே பாஸ்போர்ட்டை எடுத்து வர உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து சிறுவனுக்கு உதவ விமானி முன்வந்தார்.அந்த விமானத்தை சென்னை நோக்கி திருப்பினார். 10.45 மணியளவில் விமானம் சென்னை விமான நிலையம் வந்து இறங்கியது. அப்போது வேறு ஒரு பையில் அவனது பாஸ்போர்ட் இருப்பதை கண்டுபிடித்த சிறுவன், பாஸ்போர்ட் தன்னிடம்தான் இருக்கிறது என்ற தகவலை விமானிக்கு தெரிவித்தான்.தனது குழப்பத்தின் காரணமாக விமானத்துக்கும், பயணிகளுக்கும் சிரமம் ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டான். தனது பாஸ்போர்ட்டை எடுத்து செல்வதற்காக மனிதாபிமானத்துடன் விமானத்தை சென்னைக்கு திருப்பிய விமானி மற்றும் விமான சிப்பந்திகளுக்கு நன்றி தெரிவித்தான்.

0 Comment "சிறுவன் பாஸ்போர்ட்டை தவற விட்டதால் சென்னை திரும்பிய விமானம்"

Post a Comment