மோடிக்கு அனுமதி மறுத்த இடத்தில் ராகுல்

வாரணாசியில் மோடிக்கு அனுமதி மறுக்கப்பட்ட அதே இடத்தில், ராகுல் காந்தி நேற்று பிரம்மாண்ட பேரணி நடத்தினார். இதற்கு பாஜ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசியில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. ராகுல் போட்டியிடும் அமேதியில் கடந்த 7ம் தேதி தேர்தல் நடந்தது. அதற்கான பிரசாரம் முடியும் நாளில், அந்த தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் ஸ்ம்ரிதி இராணியை ஆதரித்து மோடி பிரசாரம் செய்தார். அப்போது, மாபெரும் பேரணியை நடத்தி பாஜ தனது பலத்தை காட்டியது.

இதற்கு பதிலடியாக, மோடியின் வாரணாசி தொகுதியில் ராகுல் நேற்று போட்டி பேரணி நடத்தினார். இந்த பேரணி 12 கிமீ தூரம் நடந்தது. இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். காரின் மீது அமர்ந்து ராகுல் சென்றார். இருப்பினும், பேரணியில் அவர் பேசவில்லை. பிரசாரம் நேரம் மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. அதுவரை ராகுல் பிரசாரம் செய்தார்.

இங்குள்ள பெனியாபாக்கில் மோடி பிரசாரம் செய்வதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி கடந்த புதன்கிழமை பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி அனுமதி மறுத்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜ. தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி வாரணாசியிலும், டெல்லியிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதனால், பாஜவுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் நேரடி வார்த்தை மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், மோடிக்கு அனுமதி மறுக்கப்பட்ட அதே இடத்தில் ராகுல் நேற்று பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டதால், பாஜ கோபம் அடைந்துள்ளது. இக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி தனது டிவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ‘பாஜ பிரதமர் வேட்பாளர் மோடி பிரசாரம் செய்வதற்கு பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி அனுமதி மறுக்கப்பட்ட அதே இடத்தில், மற்றவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது எப்படி? மோடிக்கு கூறப்பட்ட பாதுகாப்பு காரணம், மற்றவர்களுக்கு ஏன் சுட்டிக்காட்டப்படவில்லை. இதன் மூலம், தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. மோடிக்கு பாதுகாப்பு காரணத்துக்காக அல்லாமல், அரசியல் காரணத்துக்காக அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது என்பது இப்போது தெளிவாக தெரிகிறதுஎன்று கூறியுள்ளார்.

 

0 Comment "மோடிக்கு அனுமதி மறுத்த இடத்தில் ராகுல்"

Post a Comment