சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 24 ரன்னில் பஞ்சாப்பிடம் தோற்று 6–வது இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.
முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன் குவித்தது. ஷேவாக் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 58 பந்தில் 122 ரன்னும் (12 பவுண்டரி, 8 சிக்சர்), மில்லர் 19 பந்தில் 38 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் விளையாடிய சென்னை அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 202 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 24 ரன்னில் தோற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. ரெய்னாவின் அதிரடியான ஆட்டம் வீணாகிவிட்டது. அவர் 25 பந்தில் 12 பவுண்டரி, 6 சிக்சருடன் 87 ரன் எடுத்தார். அவரது அதிரடியான ஆட்டத்தால் சென்னை 6 ஓவரில் 100 ரன்னை தொட்டது. 7–வது ஓவரில் முதல் பந்தில் அவர் ‘ரன்அவுட்’ ஆனார். அதை தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்து சென்னை அணி தோல்வியை தழுவியது மிகப்பெரிய ஏமாற்றமே. ரெய்னாவுக்கு அடுத்தப்படியாக டோனி 31 பந்தில் 42 ரன் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார்.
இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்ததால் டோனி வெளிநாட்டு வீரர்களை மறைமுகமாக சாடியுள்ளார். இதே போல சுழற்பந்து வீரர்கள் மீதும் பாய்ந்துள்ளார். தோல்வி குறித்து டோனி கூறியதாவது:–
ரெய்னாவின் அதிரடியான ஆட்டத்தால் நாங்கள் 227 ரன் இலக்கை சேஸ் செய்து இருக்க வேண்டும். ஆனால் மிடில் ஓவரில் விக்கெடுக்கள் சரிந்து விட்டன. அணியில் உள்ள அனுபவம் வாய்ந்த வீரர்கள் பொறுப்பு இல்லாமல் விளையாடினார்கள். இதுவே தோல்விக்கு காரணமாகும். எங்களது சுழற்பந்து வீரர்கள் ரன்களை வாரி கொடுத்து விட்டனர். பேட்டிங்குக்கு ஏற்ற இது மாதிரியான ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சில் முன்னேற்றம் தேவை.
ஷேவாக்கின் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது. அவர் விளையாட ஆரம்பித்து விட்டால் எந்த ஒரு பந்து வீச்சாளராலும் அவரை தடுத்து நிறுத்த முடியாது.
இவ்வாறு டோனி கூறினார்.
சென்னை அணியில் நேற்று விளையாடிய வெளிநாட்டு வீரர்கள் 4 பேரும் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். டுபெலிசிஸ் ரன் எதுவும் எடுக்காமலும் சுமித் 7 ரன்னிலும், மேக்குல்லம் 11 ரன்னிலும், டேவிட் ஹஸ்சி 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
0 Comment "வெளிநாட்டு வீரர்கள் மீது டோனி பாய்ச்சல்"
Post a Comment