கோல்கட்டா அணிக்காக ஐ.பி.எல்., பைனலில் பங்கேற்பதா, அல்லது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்புவதா என, குழப்பத்தில் உள்ளார் சுனில் நரைன்.
வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், சுனில் நரைன் போன்றவர்கள், ஐ.பி.எல்., தொடரில் தவிர்க்க முடியாத வீரர்களாக உள்ளனர். இவர்களுக்கு அந்தந்த அணி நிர்வாகங்கள், பல கோடிகளை கொட்டிக் கொடுத்துள்ளது.
இதில், சுனில் நரைன் விளையாடும் கோல்கட்டா அணி, ஜூன் 1ல் நடக்கும் ஐ.பி.எல்., பைனலில் பங்கேற்கவுள்ளது.
அதேநேரம், ஜூன் 8ல் துவங்கும் நியூசிலாந்து தொடருக்கு தயார் ஆவதற்காக, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், மே 22 முதல் ஜூன் 1க்குள், பயிற்சி முகாமில் இணைய வேண்டும் என, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு (டபிள்யு.ஐ.சி.பி.,) ‘கெடு’ விதித்துள்ளது.
இதனால், கோடிகளை கொட்டித் தரும் ஐ.பி.எல்., தொடரில் நீடிப்பதா, தேசிய அணிக்கு திரும்புவதா, அதாவது பணமா, தேசமா என, விழிக்கிறார் நரைன்.
இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டின் (டபிள்யு.ஐ.சி.பி.,) தலைமை அதிகாரி மைக்கேல் முர்ஹெட் கூறுகையில்,‘‘ இது அவரது முடிவு. இருப்பினும், விதியை மீறி, குறிப்பிட்ட தேதிக்குள் வரவில்லை எனில், அணி தேர்வில் பரிசீலிக்கப்பட மாட்டார்,’’ என்றார்.
கோல்கட்டா அணி தலைமை அதிகாரி வெங்கி மைசூர் கூறுகையில்,‘‘ நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கவே நரைன் விரும்புகிறார். அதேநேரம், ஐ.பி.எல்., பைனலும் முக்கியம் என்பதால், இதில் பங்கேற்க, நரைனுக்கு மட்டும் சில நாட்கள் சலுகை காட்ட வேண்டும்,’’ என்றார்.
0 Comment " கோல்கட்டா அணிக்காக ஐ.பி.எல்., பைனலில் பங்கேற்பதா குழப்பத்தில் சுனில் நரைன்"
Post a Comment