வங்கதேசத்தை வென்றது இந்தியா: ரஹானே, உத்தப்பா அபாரம்

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணி 273 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டதால், வெற்றி இலக்கு 26 ஓவர்களில் 150 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது.
ரஹானே மற்றும் உத்தப்பாவின் அபார ஆட்டத்தின் துணையுடன், இந்திய அணி 24.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சுரேஷ் ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணிக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி இது.
துவக்க ஆட்டக்காரர் உத்தப்பா 44 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். ரஹானே 70 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். புஜாரா ரன் ஏதும் எடுக்கவில்லை. ராயுடு ஆட்டமிழக்காமல் 16 ரன்களும், சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 15 ரன்களும் எடுத்தனர்.
முன்னதாக, இந்திய - வங்கதேச அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தின் மிர்பூரில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட் செய்தது.
ரஹீம், ஹசன் ஆகியோரின் அரைசதங்களின் துணையுடன், இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் 272 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், இந்தியாவுக்கு 273 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தொடக்க வீரர் தமீம் இக்பால் ரன் ஏதும் எடுக்காத நிலையில், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான அனாமுல் ஹக்-குடன் ஜோடி சேர்ந்த மொமினுல் ஹக் 6 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர், அனாமுல் ஹக் - கேப்டன் முஷ்திவிகர் ரஹீம் இணை நிதானமாக பேட் செய்து, அணியை சரிவில் இருந்து மீட்டது. அனாமுல் ஹக் 44 ரன்களையும், ரஹீம் 59 ரன்களையும் எடுத்தனர்.
ஷாகிப் அல் ஹசனும் சிறப்பாக பேட் செய்து 52 ரன்கள் எடுத்து, வங்கதேச அணிக்கு உறுதுணை புரிந்தார். நாசர் ஹுசைன் 22 ரன்களைச் சேர்த்தார். ஜியாஹுர் ரஹ்மான் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். முஷாரப் மோர்டஸா 18 ரன்களில் அவுட் ஆனார். அப்துல் ரஸாக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 16 ரன்கள் எடுத்தார்.
இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரெசூல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அக்‌ஷர் படேல் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
கேப்டன் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட 7 முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் சுரேஷ் ரெய்னா தலைமையில் களமிறங்கியிருக்கிறது இந்திய அணி.
ராபின் உத்தப்பா, மனோஜ் திவாரி, பர்வீஸ் ரசூல், அக்ஷர் படேல், கேதார் ஜாதவ் ஆகியோர் தங்களின் திறமையை நிரூபிக்க இந்தத் தொடர் நல்ல வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பை போட்டியில் கழற்றி விடப்பட்ட ரெய்னா, ஐபிஎல் போட்டி யில் அபாரமாக ஆடியதன் மூலம் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டியில் அதிக ரன் குவித்தவரான உத்தப்பா இந்தத் தொடரில் சிறப்பாக ஆடும்பட்சத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷிகர் தவண் இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comment "வங்கதேசத்தை வென்றது இந்தியா: ரஹானே, உத்தப்பா அபாரம்"

Post a Comment