காலந்தோறும் கலாட்டா!
எல்லாக் குழந்தைகளுக்கும் தந்தைதான் முதல் கதாநாயகன். பேச்சு வராத மழலைகள்கூட அப்பா செய்வதைப்போல செய்து காட்டி குதூகலம் அடையும். ''அப்பா எப்படி போன் பேசுவார்?'' என்று அம்மா கேட்டதும், தன் பிஞ்சுக் கைகளை காதில் வைத்துக்கொண்டு 'கயபுயா’ என்று எதையாவது பேசிக் காட்டும். ''அப்பா எப்படி பைக் ஓட்டுவார்?'' என்று கேட்டால், வெறும் கையால் ஆக்ஸிலேட்டரைத் திருகி, காலால் கிக்கரை உதைப்பதுபோல உதைத்துக்காட்டி வாயால் 'டுர்ர்ர்’ என்று சத்தமிட்டு சந்தோஷம் அடையும். அப்பாவைப்போலச் செய்வதில், குழந்தைகளுக்கு அவ்வளவு ஆசை.
தன்னை புதிய உலகுக்கு அழைத்துச் செல்ல அப்பாவால் மட்டுமே முடியும் என்று குழந்தைகள் நம்புகின்றன. அதனால். அப்பா சட்டை அணியும்போதே குழந்தைகளும் வெளியே கிளம்பத் தயாராகிவிடுகின்றன. அப்பாவின் செருப்புகளைத் தன் பிஞ்சுக் கால்களில் மாட்டிக்கொண்டு, அப்பாவாகவே மாறிவிட்டதுபோல் குழந்தைகள் நடந்து காட்டும் அழகே அழகு. என்னதான் தாய் பாசத்தைப் பொழிந்துகொண்டே இருந்தாலும், அப்பாவைச் சுற்றியே வட்டமிடும் குழந்தைகளின் மனசு.
பள்ளிப் பருவத்தில்...
எல்லாம் டி.வி.யும், சினிமாவும் பார்க்க ஆரம்பிக்கும் வரையில்தான். பிறகு, சோட்டா பீம், 'பென் டென்’ போன்றவர்களைத் தன் விருப்பத்துக்குரிய ஹீரோவாக்கிக்கொள்கிறார்கள் குழந்தைகள். அடிக்கடித் தன்னையே 'சோட்டா பீம்' என்றே அழைத்துக்கொள்ளத் துவங்குகின்றன. பிறகு, ஹீரோயிஸம் செய்யும் சினிமா ஹீரோக்களைக் கொண்டாடுகின்றன. ஆனாலும், குழந்தைப் பருவம் முழுக்க அப்பா மீதான மரியாதை அப்படியேதான் இருக்கும்.
பதின்ம வயதில்...
பதின்ம வயதின் உச்சத்தில் இயற்கையாகவே அப்பாக்களுக்கும் மகன்களுக்கும் முட்டல் ஏற்படும். இளைஞர்கள் அப்பாக்களை டார்ச்சராகவே கருதுகிறார்கள். பெரும்பாலான சினிமாக்கள் இளைஞர்களைக் குறிவைத்தே வருவதால், சினிமாவில் அப்பாக்களைக் கிண்டலடிக்கும் காட்சிகளைப் பார்க்கும்போது, உற்சாகமாகச் சிரிப்பார்கள். ஆனாலும், பாக்கெட் மணிக்காகவாவது பதிமன்ம வயதுப் பையன்கள், அப்பாவைச் சார்ந்து இருப்பார்கள். பைக் வாங்கி, டாட்ஸ் கிப்ட் என்று எழுதுவார்கள்.
வேலைக்குப் போகும்போது...
வேலைக்குப் போக ஆரம்பித்ததும் அப்பாவுடனான உறவு கிட்டத்திட்ட ஜீரோவாகிவிடும். முதல் மாத சம்பளத்தை வாங்கி அம்மாவின் கையில் கொடுப்பது, அம்மாவுக்கு மட்டும் அவ்வப்போது ஏதாவது பரிசுப் பொருள் கொடுப்பது என்று மாறிவிடுகிறார்கள் இளைஞர்கள். அம்மாவிடம், 'அந்தாளுக்கு இதே வேலையாப் போச்சு. எப்ப பாரு. நொயிநொயின்னுக்கிட்டு’, 'அப்பா வர்றதுக்குள்ள நான் கிளம்புறேன். வந்தா நீயே சொல்லிடு’ என்பது மாதிரியான வசனங்களைப் பேச ஆரம்பிப்பார்கள்.
திருமணத்துக்குப் பிறகு...
திருமணமானப் பிறகு சொல்லவே வேண்டாம். அவன் குடும்பத்தைக் கவனிக்கவே நேரம் இருக்காது. பெற்றோர் மீது பாசமாக இருந்தால் மனைவிக்குப் பிடிக்காதே என்று, அடக்கி வாசிக்க ஆரம்பிப்பான். தனிக் குடித்தனம் இருந்தால், தாய்-தந்தையைப் பார்க்கச் செல்வதே அபூர்வமாகிவிடும்.
வாழ்க்கை ஒரு வட்டம்...
தனக்கொரு குழந்தை பிறந்ததும், மனைவியோடு போட்டி போட்டுக்கொண்டு குழந்தை மீது பாசத்தைப் பொழிவான். அந்தக் குழந்தை மனைவியைக் காட்டிலும் தன் மீது பாசத்தைப் பொழியும்போதுதான், தன்னுடைய தந்தையின் நினைவு வரும் அவனுக்கு. அப்பா பெயரின் முதல் எழுத்து வரும்படி, மகனுக்கொரு பெயர் வைப்பான்.
அந்த மகன் பெரியவனாகி டார்ச்சர் கொடுக்க ஆரம்பிக்கும்போதுதான், நம்ம அப்பாவையும் நாம இப்படித்தானே கஷ்டப்படுத்தினோம் என்று வருத்தப்படுவான். ஈகோ தடுத்தாலும் ஒரு கட்டத்தில் தன் தந்தையை மீண்டும் மதிக்க ஆரம்பிப்பான். மகனிடம் தன் தந்தையின் பெருமைகளைப் பேசி போரடிப்பான்.
ஆக, வாழ்க்கை ஒரு வட்டம்ப்பா... எல்லா மகன்களும் அப்பாவை மதிக்கும் காலம் கட்டாயம் வந்தே தீரும்! ஆமா, நீங்க இந்த வட்டத்தில் எந்த இடத்தில் இருக்கீங்க?
0 Comment "இதுதான் மகன்,அப்பா உறவு"
Post a Comment