உலகக்கோப்பை கால்பந்து முதல் போட்டியில் குரேஷிய அணியை 3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அபார வெற்றி பெற்றது.
பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் 29 மற்றும் 71-வது நிமிடங்களில் கோல்களை அடிக்க, கடைசி கூடுதல் நேரத்தில் ஆஸ்கார் 3-வது கோலை அடித்தார்.
இதில் பிரேசில் அடித்த 2-வது கோல் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. காரணம், அது பெனால்டி கிக் கொடுக்கப்பட்ட கோல் ஆகும்.
பிரேசிலின் பலவீனங்களை ஆட்டத்தின் துவக்கத்தில் குரேஷியா வெளிப்படுத்திக் காட்டியது. அப்படிப்பட்ட மூவ் ஒன்றில்தான் பிரேசில் கோலுக்கு அருகே சென்று நெருக்கடி கொடுக்க, பந்தை வெளியே தட்டிவிட முயன்ற பிரேசில் வீர்ர் மார்செலோ கோலுக்குள் பந்தை அடித்துவிட்டார். பிரேசில் கோல் கீப்பர் ஜூட் சீசர் அதிர்ச்சியடையும் விதமாக குரேஷியாவுக்கு முதல் கோலை பிரேசிலே போட்டுக் கொடுத்தது.
இந்த சுய-கோலால் பிரேசில் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து வாயடைத்துப் போயினர். மார்செலோவைத் தட்டிக் கொடுத்து சமாதானம் செய்தார் கோல் கீப்பர் சீசர். இந்த மூவிற்கு முன்னமேயே குரேஷியத் தாக்குதல் தொடங்கியது.
பிரேசிலை வீழ்த்துவோம் என்று கூறிய லூகா மோட்ரிக், இவான் பெரிசிக் விறுவிறுவென பந்தை முன்னே கொண்டு சென்றனர். பந்தை ஓலிவிக்கிடம் அடிக்க அவர் பந்தை தலையால் முட்ட கோல் இலக்கிலிருந்து அந்த ஷாட் விலகிச் சென்றது. ஆட்டத்தின் 9-வது நிமிடத்திலேயே பிரேசிலுக்கு ஆட்டம் கொடுத்தது குரேஷியா.
அடுத்த 2-வது நிமிடத்தில் அதாவது ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில்தான் அந்த துரதிர்ஷ்டம் நிகழ்ந்தது. மீண்டும் குரேஷியா தாக்குதல் ஆட்டத்தில் பிரேசில் கோல் பகுதிக்குள் முன்னேற, இடது பக்கத்திலிருந்து மீண்டும் ஓலிவிக் ஒரு ஷாட்டை கிராஸாக அடிக்க, பந்து ஜெலாவிக் கால்களுக்கு இடையே புகுந்து செல்ல, மார்செலோ அதனை வெளியே தட்டி விடுவ்தற்குப் பதிலாக தங்கள் கோலுக்குள் அடித்துவிட்டார். குரேஷிய அணிக்கு முதல் கோலை போட்டுக் கொடுத்தது பிரேசில்.
அதன் பிறகு உயிர்பெற்றது பிரேசிலின் ஆட்டம். ஆஸ்கார் அபாரமாக ஒரு பாந்தை விறு விறுவென வலது புறத்திலிருந்து எடுத்துச் சென்றார், பிறகு ஒரு அபாரமான, துல்லியமான ஷாட்டை குரேஷிய கோலை நோக்கி அடித்தார் ஆஸ்கார். ஆனால் பந்தை குரேஷிய கோல் கீப்பர் பிளெடிகோசா அபாரமாக வலது புறம் பாய்ந்து எழும்பி வெளியே தட்டி விட்டார்.
அதன் பிறகும் ஆஸ்கார் வலதுபுறம் குரேஷியாவுக்கு பெரிய அச்சுறுத்தலாகவே திகழ்ந்தார். இடைவேளைக்குப் பிறகு பிரேசிலின் ஆட்டத்தில் விறுவிறுப்பு மந்தமாகவே காணப்பட்டது. என்ன செய்வதென்று சற்றே தடுமறியது பிரேசில் அணி. அப்போது பயிற்சியாளர் ஸ்கோலாரி, ஹெர்னானஸ், பெர்னாட் என்ற இரண்டு வீரர்களை களத்திற்கு அனுப்பினார். குரேஷிய அணியோ 1-1 என்ற டிராவுக்கே ஆட்டத்தை முடிக்க விரும்பியதுபோல் ஆடியது. அவ்வப்போது ஜெலாவிக் மற்றும் ஓலிவிக் வேகம் காட்டினாலும் முக்கால் வாசி ஷாட்களை நடுக்களத்திலிருந்து அடித்து விரயம் செய்தனர்.
அதன் பிறகுதான் சர்ச்சைக்குரிய அந்தக் கணம் வந்தது. பிரேசில் வீரர்கள் ஒரு தாக்குதல் ஆட்டம் தொடுக்க, பந்து குரேஷிய கோல் எல்லைக்குள் சென்றது. பிரேசில் வீரர் ஃபிரெட் ஒரு ஷாட்டை அடிக்க முன்னேறும்போது குரேஷிய வீரர் டெஜான் லவ்ரென் அவரைத் தடுத்ததாக முறையீடு எழ நடுவர் பிரேசில் சார்பாக பெனால்டி கிக் கொடுத்தார். பெனால்டி ஷாட்டை நெய்மார் அடிக்க மீண்டும் அதனை சரியாகவே கணித்த குரேஷிய வீரர் பந்தைத் தட்டிவிட்டும் கோலாகவே மாறியது. பிரேசில் 2 - 1 என்று முன்னிலை பெற்றது.
ரீப்ளேயில் காட்டப்பட்டபோது குரேஷிய வீரர் வேண்டுமென்றே செய்யவில்லை என்பது நன்றாகவே தெரிந்தது. பெனால்டி கிக் கொடுக்கவேண்டிய அளவுக்கு அது ஃபவுல் இல்லை என்பதும் தெரிந்தது. இதனால் பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. பிரேசில் 2-வது கோல் அடித்தவுடன் குரேஷிய வீரர்களிடமிருந்து வசைமாரி வரத் தொடங்கியது.
இந்த சர்ச்சைக்குரிய பெனால்டி கிக்கிற்குப் பிறகே குரேஷிய ஆட்டத்தில் ஒரு விறுவிறுப்பும் ஆக்ரோஷமும் கூடியது. அடிக்கடி பிரேசில் கோல் எல்லைக்குள் அவர்கள் சென்றனர். ஆனால் ஒரு மூன்று முறையாவது பிரேசில் கோல் கீப்பர் சீசர் பந்துகளைத் தடுத்திருப்பார். அதுவும் ஒரு தருணத்தில் கார்னர் ஷாட் ஒன்றை குரேஷிய வீரர் தலையால் உள்ளுக்குள் தள்ளியிருப்பார். அப்போது சீசர் அவருக்குச் சரிசமாக எழும்பி தட்டி விட்டார். அது மீண்டும் ஓலிவிக்கிடம் செல்ல அவர் அதை கோலை நோக்கி அடிக்கிறார் அதனையும் தட்டி விடுகிறார் மீண்டும் அது கோலை நோக்கி அடிக்கப்படுகிறது அதனையும் தடுக்கிறார் சீசர்.
கடைசியில் குரேஷியா மேலும் ஒரு ஆக்ரோஷ ஆட்டத்தில் பிரேசில் எல்லைக்குள் புகுந்து கோல் அடிக்கிறது. ஆனால் ஓலிவிக், பிரேசில் கோல் கீப்பர் சீசரை முறையற்ற விதத்தில் எதிர்கொண்டார் என்று அந்த கோல் நடுவரால் மறுக்கப்படுகிறது. இதுவும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கடைசியில் இந்த அதிர்ச்சியிலிருந்து குரேஷியா மீள முடியாத ஒரு தருணத்தில் அபாய வீரர் ஆஸ்கார் நடுக்களத்திலிருந்து ஒரு பந்தை எடுத்துச் செல்கிறார் அங்கு குரேஷிய தடுப்பு வீரர்கள் இல்லை, கோல் கீப்பரும் பிரேசில் ஸ்ட்ரைக்கர் ஆஸ்காரும் நேருக்கு நேர் இருந்தனர். ஆஸ்காரின் ஷாட் 3வது கோலாக மாறுகிறது. இது 90 நிமிடங்களுக்குப் பிறகு கூடுதல் நேரத்தில் விழுந்த கோல் ஆகும்.
சர்ச்சைக்குரிய முறையில் பிரேசில் வெற்றி பெற்றது. நடுவர்கள் பிரேசில் சார்பாக சற்று கூடுதலாக செயல்பட்டதாகவே குரேஷிய பயிற்சியாளர் தெரிவித்தார். இரட்டை கோல் நெய்மார் கூறுகையில், உலகக் கோப்பை கால்பந்துத் தொடரில் இரட்டை கோலுடன் தொடங்கியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
பிரேசில் அணி மீண்டும் செவ்வாயன்று மெக்சிகோவை எதிர்கொள்கிறது. குரேஷிய அணி கேமரூன் அணியை எதிர்கொள்கிறது. இன்றைய நள்ளிரவு ஆடத்தில் ஸ்பெயின், நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இது உண்மையில் விறுவிறுப்பான ஆட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
0 Comment " சர்ச்சைக்குரிய முறையில் பிரேசில் வெற்றி"
Post a Comment