மத்திய அரசின், ‘யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்’ என்ற அமைப்பு சார்பிலான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் குமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரி சிமி வெற்றி பெற்றுள்ளார்.
இவரைப்போல நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி காந்திநகரைச் சேர்ந்த கமலாஷினியும் இந்த தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார். ஐ.ஆர்.எஸ். என்று அழைக்கப்படும் இந்திய வருவாய்ப்பணிக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
இவர் பிளஸ்–2 வுக்கு பிறகு மருத்துவம் பயின்று டாக்டராக வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தவர், பின்னர் சிவில் சர்வீஸ் பக்கம் திரும்பி வெற்றியும் பெற்று சாதித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:–
பல் டாக்டர்
டாக்டராக வேண்டும் என்பதுதான் சிறுவயதில் எனது விருப்பம். ஆனால் எம்.பி.பி.எஸ்.சுக்கு இடம் கிடைக்கவில்லை. பல் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. பல் மருத்துவம் இறுதியாண்டு படிக்கும்போது என் தாய்மாமா 2 பேரும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் யோசனை கூறினர். உன்னால் முடியும்? என்று அவர்கள் நம்பிக்கை தந்தபிறகுதான் எனக்கு அந்த எண்ணமே உருவானது. உடனே அந்த தேர்வுக்கு தயாராகி எழுதினேன். அதில் தோற்றுவிட்டேன்.
இதற்கிடையே, பல் டாக்டர் படிப்பை முடித்து நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்தேன். ஆனாலும் ஐ.ஏ.எஸ். கனவை விடவில்லை. இந்த நிலையில்தான் ‘தினத்தந்தி’ பத்திரிகையில் வந்த விளம்பரத்தை பார்த்து, ஆசாரிபள்ளம் ரோட்டில் உள்ள எலிசா அகாடமியில் சேர்ந்து ஐ.ஏ.எஸ். பயிற்சி பெற்றேன். இதிலும் முதல் முயற்சியில் தோற்றேன். 2–வது முயற்சியில் தற்போது வெற்றி பெற்றுள்ளேன். நான் நினைத்தது ஐ.ஏ.எஸ். ஆனால் தேர்வில் ஐ.ஆர்.எஸ். பணிக்குத்தான் தகுதி பெற்றுள்ளேன். இருப்பினும் ஐ.ஏ.எஸ். கனவை எட்டாமல் விடுவதில்லை. மீண்டும் தேர்வெழுதி ஐ.ஏ.எஸ். ஆவேன்.
இவ்வாறு கமலாஷினி கூறினார்.
படிக்க வேண்டியவை
மேலும் தேர்வு பற்றி அவர் கூறுகையில், ‘தேர்வுக்கான ‘சிலபஸ்’ பற்றி அறிந்து சிறந்த ஒரு வழிகாட்டி மூலம் அதைப் படித்தாலே போதும். தேர்வில் வெற்றி பெற்று விடலாம். இதுதான் தேர்வெழுதும் மாணவ–மாணவிகளுக்கு நான் கூறும் டிப்ஸ்’ என்றார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி கமலாஷினியை அவர் பயிற்சி பெற்ற ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் எட்மண்ட் மற்றும் பெற்றோர் பாராட்டினர். மாணவியின் தந்தை எஸ்.வரதராஜன் நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிகிறார். தாயார் பெயர் தமயந்தி. ரங்காஷினி என்கிற அக்காளும், செல்சாஷினி என்கிற தங்கையும் உள்ளனர். அக்காள் அரசு டாக்டராக உத்திரமேரூரில் பணிபுரிகிறார். தங்கை என்ஜினீயரிங் முடித்துள்ளார். இவரது கனவும் ஐ.ஏ.எஸ். என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது சொந்த ஊர் அகஸ்தீஸ்வரம் உள்ள சோட்டப்பணிக்கன்தேரிவிளை ஆகும்.
0 Comment "நாகர்கோவில் மாணவி வெற்றி பல் டாக்டராக பணிபுரிந்தவர் ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஆனார்"
Post a Comment