உலக கோப்பை கால்பந்து போட்டி கோலாகல தொடக்கம்

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் கடந்த ஒரு மாத கால எதிர்பார்ப்பான 20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 11.30 மணிக்கு பிரேசில் நாட்டின் சாவ்போலோ நகரில் கோலகலமாக தொடங்குகிறது. 32 நாட்கள் நடக்கும் இப்போட்டியில் 32 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. உலகில் அனைத்து நாடுகளிலும் விளையாடப்படும் ஒரே விளையாட்டு கால்பந்து மட்டுமே. 4 ஆண்டுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது. இதுவரை 19 உலக கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. 20 வது உலக கோப்பைக்கான போட்டி இந்தாண்டு தென் அமெரிக்காவின் பிரேசிலில் நடத்தப்படுகிறது. இதில், நடப்பு சாம்பியனான ஸ்பெயின், பிரேசில், அர்ஜென்டினா, குரோஷியா உட்பட 32 அணிகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கு பிரேசில் நாட்டில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்த எதிர்ப்பையும் மீறி உலக நாடுகள் வியக்கும் அளவுக்கு உலக கோப்பை போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பிரமாண்டமான முறையில் செய்துள்ளது. புதிய மைதானம் அமைப்பது, பாதுகாப்பு வசதிகள் என ரூ.84 ஆயிரம் கோடி வரை செலவு செய்துள்ளது. 64 ஆண்டுக்கு பிறகு பிரேசில் நாட்டில் 2வது முறையாக உலக கோப்பை போட்டிகள் நடைபெறுவதால் அந்த நாட்டின் குக்கிராமங்களும் விழாக்கோலம் பூண்டுள்ளன.


போட்டிகள் நடத்துவதற்கு ரியார்டோஜெனிரோ, பிரேசிலியா, சாவோபாவ்லோ, கியூயாபா, போர்ட்டோ அலெக்ரோ, ரெசிபே, மனாஸ், ஹரிசான்டே உட்பட 12 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு பிரமாண்ட ஸ்டேடியங்கள் எழுப்பப்பட்டுள்ளன. தொடக்க விழா மற்றும் முதல் போட்டிகள் புதிதாக கட்டப்பட்டுள்ள எரீனா கோரிந்தியான்ஸ் ஸ்டேடியத்தில் நடக்கும். முதல் போட்டியில் பிரேசில், குரோஷியாவை எதிர்கொள்கிறது. முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு செயற்கை கால் பொருத்தப்பட்ட ஒருவர் இந்த வரலாற்று சிறப்புமிக்க தொடரை தொடங்கி வைக்கிறார். போட்டிக்கு முன்பாக பிரமாண்ட கோலாகல துவக்க விழா நடக்கிறது. கலை நிகழ்ச்சியில் பிரேசில் நாட்டின் இயற்கை வளங்கள், மக்களின் வாழ்வோடு கலந்துள்ள கால்பந்து போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள், இசை, நடனம் நடத்தப்பட உள்ளன. அமெரிக்க நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸ் பங்கேற்கிறார். 90 ஆயிரம் விளக்குகள் அடங்கிய எல்இடி பந்து மூலம் நடத்தப்படும் கலை நிகழ்ச்சி பார்வைகயாளர்களை வெகுவாக கவரும். 

துவக்க விழா நிகழ்ச்சியில் பிபா தலைவர் செப் பிளாட்டர், பிரேசில் அதிபர் தில்மா ரவூப் உட்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். லீக் சுற்றில் மட்டும் 48 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதைத் தொடர்ந்து ரவுண்ட் ஆப் 16, கால் இறுதி, அரை இறுதி, இறுதிப் போட்டி நடத்தப்பட உள்ளது. இறுதியாட்டம் ஜூலை 13ம் தேதி நடக்கிறது. இன்று தொடங்கும் போட்டிகளில் இடையில் 3 நாட்கள் மட்டுமே நடைபெறாது. கால் இறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் முடிந்தவுடன் ஜூலை 3ம் தேதி, அரையிறுதி போட்டிகள் முடிந்த பின்னர் ஜூலை 11, 12 ஆகிய நாட்களில் மட்டும் போட்டிகள் ஏதும் இல்லை. மற்ற 32 நாட்கள் தொடர்ச்சியாக போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டியில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் கோல்லைன் டெக்னாலஜி என்ற புதிய தொழில்நுட்பம் மூலம் கோல் விழுந்ததை துல்லியமாக அறியும் முறை அமல்படுத்தப்படுகிறது. இதற்காக கோல் கம்பங்களில் தலா 7 கேமராக்கள் பொருத்தப்படுகிறது. உள்ளூரில் வெல்லுமா பிரேசில்: முதல் போட்டியில் பிரேசில் அணி குரோஷியாவை எதிர்த்து விளையாடுகிறது. 

இந்திய நேரப்படி இந்த போட்டி நாளை அதிகாலை 1.30 மணிக்கு நடக்கிறது. பிரேசிலின் இளம் வீரர் நெய்மாரை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். இத்தொடரில் அசத்தக் கூடிய வீரராக இவர் கருதப்படுகிறார். ஏற்கனவே ஐந்துமுறை உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது போட்டியை நடத்தும் பிரேசில் அணி. ஆனால் உள்ளூரில் நடந்த உலக கோப்பையை அந்த அணியால் வெல்லமுடியவில்லை. அந்த கனவு இந்தமுறை நிறைவேறும் என கோடிக்கணக்கான அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். கடந்த முறை பிரேசிலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்ற ஸ்பெயின் அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை மறு நாள்(14ம்தேதி) நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. ஐரோப்பிய நாடுகளில் தற்போது ஸ்பெயின் வலுவான அணியாக இருப்பதால் கோப்பையை தக்கவைக்க அந்த அணியும் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comment "உலக கோப்பை கால்பந்து போட்டி கோலாகல தொடக்கம்"

Post a Comment