அரபு நாடுகளில் பல நூற்றாண்டுகளாகவே பிறந்த குழந்தைகளுக்கு ‘தாதி’ எனப்படும் வளர்ப்புத் தாய்கள் பாலூட்டி, வளர்த்து வரும் வழக்கம் உள்ளது.
இந்த சேவைக்கு வளர்ப்புத் தாய்களுக்கு ஒரு பெரிய தொகை சம்பளமாக வழங்கப்படும். தனக்கு பாலூட்டி, வளர்த்த பெண்ணை சொந்தத் தாயாகவே பிள்ளைகள் கருதுவதும், தன்னிடம் தாய்ப்பால் குடித்து வளர்ந்த பிள்ளைகளை தம் சொந்த மக்களாக அந்த பெண்கள் கருதுவதும் தொன்றுதொட்டு இருந்து வரும் மரபு வழி பழக்கமாக உள்ளது.
இந்நிலையில், சவுதியில் வசிக்கும் ஒரு தம்பதியர் சுமார் 25 ஆண்டு கால இல்லற வாழ்க்கையின் மூலம் 7 குழந்தைகளை பெற்றெடுத்தனர். இவ்வளவு காலத்துக்குப் பிறகு அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு பெரிய உண்மை தெரிய வந்தது.
தற்போது, கணவன்-மனைவியாக வாழ்ந்து வரும் இவர்கள் இருவரும் குழந்தைப் பருவத்தில் ஒரே வளர்ப்புத் தாயிடம் பால் குடித்து வளர்ந்துள்ளனர் என்பது வயதில் மூத்த ஒரு குடும்ப உறவினரின் மூலம் தெரிய வந்தது.
அரபு நாட்டு சட்டதிட்டங்களின்படி, ஒரே தாய் வயிற்றில் பிறந்த சகோதர- சகோதரிகளிடையே நடக்கும் திருமணங்கள் மற்றும் தகாத உறவு போன்றவை ‘ஹராம்’ (விலக்கப்பட்டது, தவிர்க்கப்பட வேண்டிய பாவச்செயல்) ஆக கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த தம்பதியர் விவகாரத்தில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்ற வழக்கில், இந்த பிரச்சனையில் சட்ட தீர்வை காண முடியாத சவுதி கோர்ட், ஒரே பெண்ணிடம் தாய்ப்பால் அருந்தி வளர்ந்தவர்கள் இல்லற வாழ்க்கையில் ஈடுபடலாமா? என்பது தொடர்பாக இஸ்லாமிய மார்க்க சட்டதிட்டங்களில் நிபுனத்துவம் பெற்ற சவுதியின் மூத்த ‘முஃப்தி’ ஷெய்க் அப்துல அஜிஸ் அல்-ஷெய்க்-கின் ஆலோசனையை கேட்டது.
சிக்கலான இந்த விவகாரம் தொடர்பாக கோர்ட்டுக்கு ஆலோசனை வழங்கிய முப்தி, தம்பதியர் இருவரையும் விவாகரத்தின் மூலம் பிரித்து வைக்க ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, அவர்கள் இருவருக்கும் விவாகரத்து செய்து வைத்த கோர்ட், இனி பிரிந்து வாழும்படியும் உத்தரவிட்டுள்ளது.
0 Comment "ஒரே தாயிடம் பால் குடித்த தம்பதியர் பிரிந்து வாழ சவுதி கோர்ட் உத்தரவு"
Post a Comment