16-வது மக்களவையில் எதிர்கட்சித் தலைவர் பதவி யாருக்கும் வழங்கத் தேவையில்லை என்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் முடிவால் காங்கிரஸ் கட்சியின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 543 மக்களவைத் தொகுதிகளில் 10 சதவீத இடங்களில் வெற்றி பெறும் கட்சிக்கே எதிர்கட்சித் தலைவர் பொறுப்பு வழங்கப்படும். இந்த முறை காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால் அக்கட்சிக்கு எதிர்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டியதில்லை என மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் ஜவஹர்லால் நேரு, ராஜிவ் காந்தி ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் கட்சி அசுர பெரும்பான்மை பெற்றதால் மக்களவையில் எதிர்கட்சித் தலைவர் இல்லாத நிலை ஏற்பட்டது.
44 இடங்களில் மட்டுமே வென்றாலும் மக்களவையில் 2வது பெரிய கட்சி என்ற அடிப்படையில்,எதிர்கட்சித் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படலாம் என்று செய்திகள் வெளியாயின. மோடியும் இது பற்றி பரிசீலிப்பதாக கூறப்பட்ட நிலையில் மக்களவைத் தலைவரின் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது. எனினும் மக்களவைத் துணைத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பதவிகளை காங்கிரஸ், அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதாதளம் ஆகியவற்றிற்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
0 Comment "காங்கிரஸிற்கு எதிர்கட்சி தலைவர் பதவி இல்லை..."
Post a Comment